தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் (28) என்ற ஐடி ஊழியர் நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் வைத்து துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வாலிபர் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது கவின்குமார் ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் என்பவர் தான் அவரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.
இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தன் அக்காவிடம் அவர் பழகி வந்ததாகவும் பலமுறை காதலை கைவிடுமாறு எச்சரித்தும் அவர் கேட்காததால் ஆத்திரத்தில் வெட்டி கொன்றதாகவும் கூறினார். இதில் சுர்ஜித் பெற்றோர் இருவரும் எஸ்ஐகளாக இருக்கும் நிலையில் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் விரைவில் அவர்களையும் கைது செய்ய இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் போலீசில் எஸ்ஐ யாக பணிபுரியும் கிருஷ்ணகுமாரி மற்றும் சரவணன் தம்பதியும் விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெரும் குற்றம். தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று இயக்குனர் மாரி செல்வராஜ் நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமை வாதத்திற்கான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமாகவும் கடுமையானதாகவும் எடுக்க வேண்டும். மேலும் இதனை நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.