மதுரை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், போலீசாரால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமியிடம், சிபிஐ அதிகாரிகள் 2வது முறையாக மதுரையில் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நீண்ட இந்த விசாரணையில், கோயிலில் நடந்த சம்பவங்கள், அஜித்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வுகள் மற்றும் போலீசாரின் செயற்பாடுகள் குறித்து விரிவாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியை நிகிதா, “நான் வெறும் புகாரே கொடுத்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனக்கு தெரியாது. அஜித்குமார் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. தினமும் இதை நினைத்துத் தான் அழுகிறேன். சிபிஐயிடம் என்னிடம் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன். இப்போது அழுவதற்கே கண்ணீரே இல்லை. உண்மையில் சாப்பிட கூட முடியவில்லை” என உணர்ச்சிவசப்படுகிறார்.
மேலும், “நான் காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் செல்ல முடியவில்லை. கல்லூரிக்கும் போக முடியாமல் தவிக்கிறேன். சமூகத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் செய்ததெல்லாம் என் நகை இழந்ததைப் பற்றிய புகார்தான். அதற்கே இந்த அளவுக்கு விபரீதம் ஏற்படும் எனக் கனவிலும் நினைக்கவில்லை. உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்துள்ளேன்” எனக் கூறினார்.
அதோடு, “ஒரு பக்கம் மட்டுமே பேசப்படுவது வேதனை அளிக்கிறது. என் நிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. என்னைப் பற்றி தவறாக பேசி விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். மீண்டும் விசாரணைக்குத் சிபிஐ அழைத்தால், நான் தயங்காமல் வருவேன்” என தெரிவித்து, தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடரும் நிலையில், சிபிஐ விரைவில் விசாரணை முடிவுகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.