ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். பயங்கரவாதத்தால் வீரர்கள், பொதுமக்கள் உயிரிழக்கின்ற நிலையில், பாகிஸ்தானுடன் விளையாடுவது எப்படிச் சாத்தியமென அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு என்னவெனில், பயங்கரவாதமும் அண்டை நாடுகளுடனான நல்லுறவும் ஒரே நேரத்தில் நடை பெற முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்றால், அது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முனைப்பாக மட்டுமே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில், செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் போட்டியிடும் முடிவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என ஓவைசி வலியுறுத்தினார்.
“வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, தண்ணீர் திறப்பும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்? இது இரட்டை நிலைப்பாடல்லவா?” என்று அவர் சாடியுள்ளார். மத்திய அரசின் இரு முகப் போக்கு மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.