விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஆயிரக்கணக்கான டென்னிஸ் ரசிகர்கள் உலகின் பழமையான டென்னிஸ் போட்டியை கண்டு ரசிப்பார்கள். விம்பிள்டனின் 148 ஆண்டுகால வரலாற்றில், அதன் அமைப்பாளர்கள் போட்டியின் அடையாளமாக மாறிய மரபுகளை பாதுகாப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். வீரர்களின் வெண்ணிற உடைகள் முதல் ஸ்டாண்டுகளில் பரிமாறப்படும் ஸ்ட்ராபெர்ரி மற்றும் க்ரீம் வரை, விம்பிள்டனின் மரபுகள் மாறாமல் உள்ளன.
1877 இல் விம்பிள்டன் உருவானது முதல், இன்று வரை மாறாத முக்கிய அம்சம் என்னவெனில் சீருடை அணிந்த லைன் நடுவர்கள். லைன் நடுவர்கள் எனப்படும் இவர்கள் எப்போதும் கோடு போட்ட சட்டைகள், வெள்ளை கால்சட்டைகள் மற்றும் கழுத்து பட்டைகளுடன் களத்தில் முக்கிய பங்காற்றி, நடுவர்களுக்கு கடினமான முடிவுகளை எடுக்க உதவினர்.
ஆனால், இந்த ஆண்டு முதல் காட்சிகள் சற்றே மாறுகிறது அதற்கு காரணம் AI டெக்னாலஜி. இந்த ஆண்டு முதல் லைன் நடுவர்களுக்கு பதிலாக AI என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் பந்தின் நகர்வை கண்காணிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
லைன் நடுவர்களுக்குப் பதிலாக AIஅடிப்படையிலான முடிவுகளை பயன்படுத்த ஆல் இங்கிலாந்து கிளப் எடுத்த இந்த முடிவை ATPயும் (Association of Tennis Professionals) ஏற்று கொண்டது.
மின்னணு லைன் காலிங் முறைக்கு மாறுவது “போட்டிகள், ஆடுகளங்கள் மற்றும் பரப்புகளில் துல்லியம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ATP கூறியுள்ளது. இந்த அமைப்பு மனிதர்களின் தலையீடு இல்லாமல், பந்துகள் கோடுகளுக்குள் விழுந்ததா அல்லது வெளியே விழுந்ததா என்பதை கண்டறிய கேமராக்கள், கணினிகள் மற்றும் சென்சார்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பந்தின் பாதைகளை கண்காணிக்கிறது.
அருகருகே ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடுகளங்களில் குழப்பம் ஏற்படாதவாறு வெவ்வேறு ஆடுகளங்களில் வெவ்வேறு குரல்களை பயன்படுத்துவோம்” என்று விம்பிள்டனின் தகவல் தொடர்புத் தலைவர் தெரிவித்தார். AI இன் துல்லியம் லைன் மனிதர்களின் துல்லியத்தை முழுமையாக விஞ்சிவிடும் என கூறப்படுகிறது.
Author: Bala Siva