உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில், ஒரு செல்ல எலியின் உயிரை காக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஹுசைனாபாத்தை சேர்ந்த அபய் ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு “மிக்கி” என்ற பெயருடைய வெள்ளை நிற எலி இருந்தது.
கடந்த நான்கு மாதங்களாக அந்த எலி உணவையும் தண்ணீரையும் சரியாக எடுத்துக் கொள்ளாமல், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனால் மிகுந்த கவலையடைந்த அபய், பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை தேடி அலைந்தார். ஆனால் எலிக்கு அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானது என்பதால், யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.
இந்நிலையில், ஜான்பூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஷாகஞ்சில் அமைந்துள்ள பாலிவால் செல்லப்பிராணி மருத்துவமனையை நாடிய அவருக்கு, அங்கு உள்ள மூத்த கால்நடை மருத்துவர் டாக்டர் அலோக் பாலிவால் உதவிகரமாக நின்றார்.
அவர் எலியின் வயிற்று பகுதியில் பரிசோதனை செய்தபோது, அதில் 240 கிராம் எடையுள்ள பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடந்த அறுவை சிகிச்சையில், மிகவும் கவனமாக பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அந்த சிகிச்சையின் போது, பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது, எலியின் உயிரைக் காக்கும் முயற்சியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, எலியின் வயிற்று தையலிடப்பட்டது. தற்போது எலி நன்றாக சுயநினைவுடன் உள்ளது.
இதற்கு பத்து நாட்கள் தையல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பின், அது முற்றிலும் நலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை நடக்கும்போது, எலியின் வயிற்றில் இருந்த பெரிய கட்டியைக் கண்டு அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவர் அலோக் பாலிவால் கூறியதாவது, “இது ஒரு மிகவும் சவாலான அறுவை சிகிச்சை. ஏனெனில் எலிக்கு அளவிற்கு மீறிய மயக்க மருந்து கொடுத்தால், அது உடனே உயிரிழக்க வாய்ப்பிருக்கும். அதனால் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டோம்.
இன்று மிக்கி நன்றாக இருக்கிறது, இதேபோல் எல்லா ஊமை உயிரினங்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்” என்றார். விலங்குகளும் பறவைகளும் நமது சூழலை சமநிலைப்படுத்தும் முக்கியமான பங்கு வகிப்பதனால், அவற்றைப் பராமரிப்பது ஒவ்வொரு நபரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.