பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள மசௌரியில் உள்ள rdps இணையதளத்தில் ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் தந்தையின் பெயர் குட்டா பாபு என்றும், தாய் குட்டியா தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படம் இருக்கும் இடத்தில் நாயின் புகைப்படம் இருக்கிறது. வீட்டு முகவரியும் இடம் பெற்றுள்ளது. இதற்கு வருவாய்த்துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் இருக்கிறது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய் பாபுவுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த சிறிது நேரத்தில் அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து விண்ணப்பதாரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கணினி இயக்குனர் மற்றும் சான்றிதழ் வழங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.