கிராமப்புறங்களில் சிறு கடைகள் தொடங்க உரிமம் கட்டாயம் எனும் தகவல் தவறு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஈபிஎஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிராமப்புற வணிகர்கள் தொழில் தொடங்க உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டதை தனது தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் விமர்சித்து வரும் நிலையில், கிராமப்புற சிறு, குறு வணிகர்களுக்கு தொழில் தொடங்க உரிமம் பெறுவதிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. கிராமப்புற சிறு, குறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என அறிவித்துள்ள தமிழக அரசு, கிராமப்புறங்களில் சிறு கடைகள் தொடங்க உரிமம் கட்டாயம் எனும் தகவல் தவறு என்றும் கூறியுள்ளது. பஞ்சாயத்து பகுதிகளில் கடைகள் நடத்த உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக வணிகர்கள் மனு அளித்திருந்த நிலையில் அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.