முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆயுள் தண்டனை - பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் உடையால் சிக்கிய தடயம்
BBC Tamil August 03, 2025 01:48 AM
X/Prajwal Revanna இந்த வழக்கில், அரசு தரப்பு 1632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது (கோப்பு புகைப்படம்)

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகெளடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்கு பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நான்கு வழக்குகளில் முதலாவது வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் இன்று (2025 ஆகஸ்ட் 2, வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்தது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்து வந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கூடுதல் நகர சிவில் மற்றும் அமர்வு நீதிபதி சந்தோஷ் கஜனனா பட் இந்த தீர்ப்பை வழங்கினார்.

தண்டனையை அறிவித்த நீதிபதி சந்தோஷ் கஜனனா பட், பிரஜ்வல் ரேவண்ணா ஏதாவது சொல்ல விரும்புகிறாரா என கேட்டபோது, தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அவர் கோரினார்.

Getty Images 2024 ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்)

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் (BNS) பிரிவுகள் 376(2)(k) (செல்வாக்கு மிக்க ஒருவரால் பாலியல் வன்கொடுமை), 376(2)(n) (தொடர் பாலியல் வன்கொடுமை), 354(a) (ஆடையை கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலாத்காரம்), 354(c) (பெண்ணின் அந்தரங்க செயல்களை மறைந்திருந்து பார்ப்பது), 506 (ஆதாரங்களை காணாமல் போகச்செய்வது) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(e) ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசு தரப்பு 1632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும், மின்னணு மற்றும் மின்னணு அல்லாத ஆதாரங்கள் என 183 ஆவணங்களை சமர்ப்பித்தது. வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உட்பட 26 சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கை இந்த ஆண்டு மே இரண்டாம் தேதியன்று விசாரிக்கத் தொடங்கிய நீதிமன்றம், இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்காக தினமும் கூடியது.

நீதிபதி தீர்ப்பை அறிவித்த பிறகு, பிரஜ்வல் ரேவண்ணா அழத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தண்டனையை அறிவிப்பதற்கு முன்னதாக பிபிசியிடம் பேசிய சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.என். ஜெகதீஷ், "இந்தப் பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். சில ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யும்" என்று தெரிவித்திருந்தார்.

ANI பென் டிரைவ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கு

பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) நான்கு பெண் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களில், அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

2024 மே 31 அன்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்த பெண் அதிகாரியும் அவரை தற்போது பாதுகாப்பாக அழைத்துச் சென்ற அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசன் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்.

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவுக்கு திரும்பி வந்து நாட்டின் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என அவரது தாத்தா தாத்தா எச்.டி.தேவேகெளடா பகிரங்கமாகக் கூறியதை அடுத்து, அவர் நாடு திரும்பினார். ஜெர்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோ வைரலானவுடன், பிரஜ்வல் ரேவண்ணா தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை (எம்.பி.க்களுக்கு வழங்கப்படும்) பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறினார்.

ஹாசனில், பிரஜ்வல் ரேவண்ணா மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ்கள் "ஆயிரக்கணக்கில்" வெளியாகி வைரலாகின. இந்த பென் டிரைவ்களில் 2960 கிளிப்புகள் இருந்தன, பெரும்பாலானவற்றில், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தெளிவாக தெரிந்தது.

தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கே.ஆர். நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து மீட்பதில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர்.

சிறப்பு விசாரணைக் குழு முன் பாதிக்கப்பட்ட பெண் ஆஜராவதைத் தடுக்க, பிரஜ்வாலின் தந்தையும், கர்நாடக அரசின் முன்னாள் அமைச்சருமான எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது மனைவி பவானி ரேவண்ணா ஆகியோர் அவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் சதி என்று மாநில முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணா கூறியுள்ளார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணாவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

  • தாய், தந்தை மட்டுமின்றி, மூன்றாவதாக ஒருவரின் டி.என்.ஏ.வையும் பெறும் குழந்தைகள் - எப்படி?
  • "குழந்தை பெற்றுக்கொள்ள நேரமில்லை" - உலக அளவில் கருவுறுதல் விகிதம் குறைய காரணம் என்ன?
  • கருத்தரித்தல் மையத்தில் வேறொருவரின் குழந்தையை கொடுத்து மோசடி - தம்பதி உண்மையை கண்டுபிடித்தது எப்படி?
குற்றப்பத்திரிகை விவரம்

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் ஒரு முறை ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூரில் உள்ள பண்ணை வீட்டிலும், ஒரு முறை பெங்களூருவில் உள்ள எச்.டி. ரேவண்ணாவின் வீட்டிலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

இரு முறையும், குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தனது செயலை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தன்னை விட்டுவிடுமாறு எதிர்ப்பு தெரிவித்து அழுவது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024, ஏப்ரல் 28 அன்று பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த புகாரிலும் இதே விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடயவியல் அறிக்கைகளும் வீடியோவில் இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண், தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது அணிந்திருந்த உடையை அவர் பணிபுரிந்த வீட்டின் அலமாரியிலேயே வைத்திருந்தார். அந்த சேலையை டிஎன்ஏ பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் கைரேகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2022 ஜூன் மாதத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் முதன்முதலில் வெளிவந்தன. இருப்பினும், அனைத்து ஊடகப் பிரிவுகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிடுவதை தடை செய்ய உத்தரவை அவர் பெற்றிருந்ததால், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை ஊடகங்களால் வெளியிட முடியவில்லை.

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஏப்ரல் மாதம் அளித்த புகார் மற்றும் வேறு மூவர் அவர் மீது புகார் அளித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.