பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் - போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை.!!
Seithipunal Tamil August 03, 2025 03:48 AM

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில், நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம். இருட்டான ஆள்டமாட்டமற்ற பகுதிகளுக்கு பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்து செல்ல வேண்டாம்.

அங்கு உங்கள் பெண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் என்ன ஆகும்? என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து போலீசார் சார்பில் நோட்டீஸ் ஒட்ட தனியார் தொண்டு அமைப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், அந்த அமைப்பு அனுமதியின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியதாகவும், சம்மந்தப்பட்ட தொண்டு அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.