விருதுநகர் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் 10000 -கும் மேற்பட்டது இயங்கி வருகிறது.முக்கிய நிகழ்வான தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி இருக்கிறது. இதில் சிலர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து வெம்பக்கோட்டை காவலர்கள் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தது.
இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். மேலும் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த 2 இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.
அனுமதி பெறாமல் கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததுடன், ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர்.
இந்த சோதனையில் வெம்பக்கோட்டை காவல் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வெம்பக்கோட்டை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.