ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?
Vikatan August 03, 2025 07:48 PM

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா என்ற இடத்தில் கடந்த 19ம் தேதி 15 வயது பெண் 75 சதவீத தீக்காயத்துடன் புபனேஷ்வர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மூன்று பேர் தீ வைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். அப்பெண்ணை மீட்டு புபனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பெண்ணின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமாகிவிட்டதாக முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை

இச்சம்பவம் குறித்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில், ''மைனர் பெண் மீது தீப்பிடித்தது தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அப்பெண் மீது தீப்பிடித்ததில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் மீது எப்படித் தீப்பிடித்துக்கொண்டது என்று தெரியவில்லை. இவ்விவகாரத்தில் யாரும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசவேண்டாம்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''எனது மகளை இழந்துவிட்டேன். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் சொல்ல முடியாத மன அழுத்தத்தைச் சந்தித்தார். இவ்விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். ஒடிசா அரசு எனக்கும் எனது குடும்பத்திற்கும் எவ்வளவோ செய்திருக்கிறது.

அனைவரும் எனது மகள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்யுங்கள். எனது மகளுக்கு அமைதி தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்த பெண் மீது பற்றிய தீயை அணைத்த துகிசியாம் என்பவர் இது குறித்துக் கூறுகையில், ''நான் வீட்டிற்கு வந்தபோது அப்பெண் மீது தீப்பற்றி இருந்தது. அப்பெண்ணின் கைகள் கட்டப்பட்டு இருந்தது.

Death (Representational Image)

நானும் எனது மகளும் அப்பெண்ணின் உடம்பிலிருந்த தீயை அணைத்து அவருக்கு வேறு உடை கொடுத்தோம். இரண்டு பைக்கில் வந்த மூன்று பேர் தன்னைக் கட்டாயப்படுத்தி இங்குக் கொண்டு வந்து தீவைத்ததாக அப்பெண் எங்களிடம் தெரிவித்தார். அவரது உறவினரைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தோம்'' என்றார்.

உயிரிழந்த பெண்ணின் தாயாரும் போலீஸில் கொடுத்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 3 பேர் தனது மகளைத் தீவைத்து எரித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் போலீஸார் இவ்விவகாரத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் தந்தையும் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது. 

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.