அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி திருட்டு குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி!
Top Tamil News August 18, 2025 01:48 PM

திருவண்ணாமலை அண்ணா சாலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அருணாச்சலேஸ்வர திருக்கோயிலை தொல்லியல்துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்தார். திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து போனவர்கள். அதாவது டெபுடேஷனில் போயிருக்காங்க. திமுகவில் ஆட்களே இல்லை, அமைச்சரவையில் 8 பேர் இருக்காங்க. திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்படுகிறார்கள். அதிமுகவில் இருந்து போனவர்கள் நல்ல இலாகா வாங்கி செழிப்பாக இருக்கிறார்கள்.

அதிமுக ஜனநாயக பூர்வமான கட்சி. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் என்னைப்போல பொதுச்செயலாளர் ஆகமுடியும். திமுகவில் அப்படி வர முடியுமா?. உழைத்தால் அதிமுகவில் முதல்வர் ஆகலாம். திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாது. முக்கியமான 3 பதவிகளையும் குடும்பமே எடுத்துக்கொண்டன. மற்றவர்கள் எல்லாம் குடும்பத்துக்கு ஊழியம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா?

எனக்கு யாரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. அப்படி இருந்திருந்தால் நான் நான்காண்டு முதல்வராக இருந்தபோது வழக்கு தொடுத்திருந்தால், இன்று பல பேர் மந்திரியாக இருந்திருக்க மாட்டார்கள். அனைவரும் வேறொரு இடத்தில் இருந்திருப்பார்கள். அதிமுக அப்படியான வேலையை ஒருபோதும் செய்யாது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அதில் 98% நிறைவேறியதாகச் சொல்கிறார்கள் ஆனால் எதுவும் நிறைவேற்றலை. இந்தியாவிலேயே சூப்பர் முதல்வராம் ஸ்டாலின், எதில் என்றால், கடன் வாங்குவதில்தான். இந்த கடன் எல்லாம் நீங்கதான் கட்டணும். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஓட்டுப்போட்ட மக்களுக்கு கடனை பரிசாக கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

அரசு காலிப்பணியிடம் ஐந்தரை லட்சம் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறுமனே 50 ஆயிரம் தான் நிரப்பினார். அத்தனையும் பொய். பழைய ஓய்வூதியம் திட்டம் கொடுப்போம் என்றார், இப்போது பட்டை நாமம் போட்டுவிட்டார். அவர்களும் போராடி களைத்துவிட்டனர். ஆக படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டார் ஸ்டாலின்.

சட்டம் ஒழுங்கு எந்தளவு மோசம் என்பது உங்களுக்கே தெரியும். வணிகர்கள் விவசாயிகள் எல்லாம் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த சொன்னார்கள். நானும் அதனை பலமுறை சொன்னேன். நடவடிக்கை இல்லாததால் போதைக்கு பலர் அடிமையாகிவிட்டனர். போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார் ஸ்டாலின். குற்றவாளிகள் போலீஸை கண்டு பயப்படுவதில்லை. 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் ராணுவம்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் உருவாகிவிட்டது.

திமுக எம்.எல்.ஏ. நடத்தும் மருத்துவமனையில் கிட்னியை திருடி விற்கிறார்கள். குறைந்த பணம் கொடுத்து கிட்னியை எடுக்கிறார்கள். இதெல்லாம் வெளியில் கசிந்ததும் திமுக அரசே திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் சோதனை செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையை மட்டும் ரத்துசெய்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை அவர்களை கைது செய்யவில்லை. யாரும் தப்பித்தவறி திமுககாரங்க மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். உள்ளே இருக்கும் உறுப்புகளை கழட்டிவிடுவார்கள்.

அப்படியே யாராவது போயிருந்தால், ஸ்கேன் செய்து உடலில் உறுப்பெல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அந்த எம்.எல்.ஏ பேட்டி கொடுத்திருக்கிறார். 250 க்கும் மேலாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணிருக்கேன், அப்படி செய்யலைனா நான் எப்படி உயர் ரக கார் வாங்கி இருக்க முடியும் என்று திமிராகப் பேசுகிறார். இது எவ்வளவு பெரிய குற்றம். அந்த குற்றச்செயலை நியாயப்படுத்தி பேசுகிறார். அதிமுக ஆட்சி அமைந்ததும் இது முழுமையாக விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.