சத்தீஸ்கார் மாநிலம் கைராக்கர் மாவட்டம் மன்பூர் கிராமத்தை சேர்ந்த அப்சர் கானுக்கு அனுப்புநர் முகவரி இல்லாத ஒரு சந்தேகத்துக்கிடமான பார்சல் வந்தது. அதனைப் பார்த்ததும் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை செய்தபோது, பார்சலின் உள்ளே இருந்த மியூசிக் சிஸ்டம் ஸ்பீக்கரில் சுமார் 2 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, போலீசார் உடனடியாக அதனை செயலிழக்கச் செய்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வினய் வர்மா என்ற நபர்தான் இந்த பார்சலை அனுப்பியிருந்தது தெரியவந்தது. அவர் கல்லூரியில் படிக்கும் போது அப்சர் கானின் மனைவியை ஒருதலையாக காதலித்திருந்தார். அந்த பெண் திருமணம் ஆனதும், பழிவாங்கும் நோக்கில் கணவரை கொல்ல திட்டமிட்டதாகவும், அதற்காக வெடிகுண்டுடன் கூடிய பார்சலை அனுப்பியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து, வினய் வர்மாவையும், அவருடன் தொடர்புடைய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு சத்தீஸ்காரின் கபீர்தாம் மாவட்டத்தில் இதே மாதிரியான சம்பவம் நடந்தது. அப்போது, மனைவியின் முன்னாள் காதலர் அனுப்பிய திருமண பரிசு பார்சல் வெடித்து சிதறியதில் புதிதாக திருமணமான மாப்பிளையும், அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை நினைவூட்டும் வகையில், இப்போதைய முயற்சி மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.