குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி. இராதாகிருஷ்ணன் சரியான தேர்வு - அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
Seithipunal Tamil August 19, 2025 12:48 AM

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில், "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும்  தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மராட்டிய மாநில ஆளுனருமான சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.

திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் இரு முறை கோவை மக்களவை உறுப்பினராகவும், மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுனராகவும், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுனராகவும், இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர். பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டோரின் நம்பிக்கையைப் பெற்றவர். பொதுவாழ்க்கையில் எந்த காலத்திலும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.

குடியரசுத் துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவையை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும்  திறன் அவருக்கு உண்டு. இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான குடியரசுத் துணைத்  தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.இராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்பதில்  எந்த ஐயமும் இல்லை. அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.