ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது இன்றைய தலைமுறையில் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் இதையே குறியாக்கிக் கொண்ட மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மும்பை வடலாவில் வசிக்கும் 71 வயது மூதாட்டி ஒருவர், ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்ய முயன்றபோது, ஒரு கிளிக்கில் ரூ.18.5 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின்படி, மூதாட்டியிடம் ‘தீபக்’ என்ற நபர் பால் நிறுவன ஊழியர் எனத் தன்னை அறிமுகப்படுத்தி, ஆன்லைனில் பால் ஆர்டர் செய்யலாம் என கூறினார். அதன் பிறகு, ஒரு லிங்க் அனுப்பி அதைக் கிளிக் செய்து படிவம் நிரப்புமாறு கேட்டார். எந்தத் தவறும் இல்லையென நம்பிய அவர், அந்த லிங்கைத் திறந்ததால், மோசடிக்காரர்கள் அவரது மொபைல் ரிமோட் அணுகலைப் பெற்று, வங்கி செயலிகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை கையகப்படுத்தினர். அடுத்த சில நாட்களில், அவரது மூன்று வங்கி கணக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ.18.5 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தற்போது, இந்த மோசடி தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, சைபர் செல் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் எந்த கும்பலுடன் இணைந்திருக்கிறார் என்பதைப் புலனாய்வு செய்து வருகின்றனர். வாழ்நாள் சேமிப்பை இழந்த அந்த மூதாட்டி மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்தச் சம்பவம், ஆன்லைனில் வரும் அறியாத லிங்குகளை கிளிக் செய்வதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.