ஐபிஎல் 2025 சீசனின் பாதியில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க இளம் வீரர் `பேபி ஏபி' என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக 2.2 கோடி மதிப்பில் வாங்கியது.
அதைத்தொடர்ந்து தான் களமிறங்கிய போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ், அடுத்த சீசனிலும் அணியில் தனது இடத்தை தக்கவைக்கும் வகையில் அதிரடி காட்டினார்.
இவ்வாறிருக்க, ஐ.பி.எல் சீசன் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், டெவால்ட் பிரெவிஸை சி.எஸ்.கே அணி வாங்கியது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனனில் பேசிய வீடியோ விவாதத்தைக் கிளப்பியது.
அந்த வீடியோவில் அஸ்வின், "பிரெவிஸை பல அணிகள் அணுகின. கூடுதல் தொகை அளிக்க முடியாமல், அளிக்க வேண்டாம் என ஒரு சில அணிகள் அவரை விட்டுவிட்டார்கள்.
பாதி சீசனில் அவரின் அடிப்படை தொகை ஓரளவுக்கு இருந்தது. இருப்பினும் இப்போது விளையாடினால் அடுத்த சீசனில் அவர் அதிக தொகைக்கு போவார் என ஏஜெண்ட்ஸ் கூடுதல் தொகை கேட்கவும், சி.எஸ்.கே அதைக் கொடுக்க தயாராக இருந்ததால் அணிக்குள் அவர் வந்தார்" என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகவே, விதிகளை மீறி சி.எஸ்.கே அதிக தொகை வழங்கியதாகப் பேச்சு எழுந்தன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாக வெடிக்கவே, “ `மாற்று வீரரின் சம்பளம், அவர் மாற்று வீரரின் ஒப்பந்த தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது' என்ற IPL விதிமுறைப்படி, குர்ஜப்நீத் சிங்கின் ஒப்பந்த தொகை 2.2 கோடி என்பதால், அதே அளவில்தான் பிரெவிஸ் கையெழுத்திடப்பட்டார்.
எந்த விதத்திலும் கூடுதல் தொகை வழங்கப்படவில்லை" என்று சி.எஸ்.கே நிர்வாகம் விளக்க அறிக்கை வெளியிட்டது.
அப்படியென்றால் யார் சொல்வது உண்மை என மேலும் கேள்விகள் எழுந்த வேளையில் அஷ்வின் தாமாக முன்வந்து, “என் கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சரியான நேரத்தில் அவரை எடுத்தது சி.எஸ்.கே-வின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப் பொருள்படும் வகையில்தான் பேசியிருந்தேன்.
விதிமுறைகளை சி.எஸ்.கே மீறவில்லை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை" என்று விளக்கமளித்து பிரெவிஸ் ஒப்பந்தம் தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மூன்றே போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்த `பேபி ஏபி' பிரேவிஸ்; எப்படி சாத்தியமானது?