நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மதுரை மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் மாநாடு இரவு 7 மணி வரை நடைபெறும். கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுதல் என பல நிகழ்வுகளைத் தொடர்ந்து விஜய் உரையாற்றுவார்.
மாநாட்டில் சுமார் 1.20 லட்சம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டு திடலில் 1.50 லட்சம் நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், குடிநீருக்காக 100-க்கும் மேற்பட்ட தொட்டிகள் மற்றும் அனைவருக்கும் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், சிசிடிவி கேமராக்கள், 420 ஒலிபெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்சி நிர்வாகிகள் தொழிலாளர்கள், வியாபாரிகள், வர்த்தக அமைப்பினர் எனப் பலருக்கும் நேரடியாகச் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர். மாநாட்டிற்காகப் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், பெருங்குடி அருகே உள்ள மலையாண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, அன்னதானம் வழங்கியுள்ளனர். மாநாட்டுக்கான நாட்கள் நெருங்க நெருங்க, மதுரை மாவட்டம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
Edited by Mahendran