வைகை அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு: நீர்ப்பிடிப்பு பகுதி கிராமங்கள் வெள்ளக்காடாகிய அபாயம்..!
Seithipunal Tamil August 21, 2025 04:48 PM

வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கி வருவதால், நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக சாலைகளையும் அணை நீர் மூழ்கடித்துள்ள நிலையில், கிராமப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் 21 கிலோ மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியாக நீர்மட்டம் உயர்வடையும் போது, அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கீழக்காமக்காபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வரை நீர்தேங்கி நிற்கும் அபாயம் நிலவும்.

இந்நிலையில் வைகையின் தொடர் நீர்வரத்தினால் கடந்த 05-ஆம் தேதி நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், 03-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அத்துடன், முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நீர்மட்டம் இன்று 69.70 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளதால் வைகை அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வரை நீர் தேங்கியுள்ளது.

அதிலும், குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் சர்க்கரைப்பட்டி-மேலக்காமக்காபட்டி இடையே நீர் சூழ்ந்துள்ளதால், இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் காளவாசல், மயானம் வழியே உள்ள சிறிய பாதையில் கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அங்கு அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட இப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை என்பதால், மேலக்காமக்கா பட்டி, கீழக்காமக்காபட்டி பகுதி மக்கள் சுற்றுப்பாதையில் வடுகபட்டி வழியே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.