மதுரை தவெக மாநாட்டில் நடிகர் அஜித்தின் கட் அவுட்- வைரலாகும் போட்டோ
TV9 Tamil News August 22, 2025 03:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில், தவெக மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுவதைக் கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டின் போது கட்சியின் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வந்த தனது பெற்றோரை விஜய் ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களிடம் கைகுலிக்கினார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யுடன் நடிகர் அஜித்குமார் இருக்கும் கட்அவுட் ஒன்றை தூக்கி பிடித்தபடி இருந்தது ஹைலைட்டாக அமைந்தது.

தவெக மாநாட்டில் அஜித் கட்டவுட்

சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் நடிகர்கள் அஜித்குமார் மற்றும் விஜய் தனிப்பட்ட விதத்தில் தங்களை நல்ல நண்பர்களாக காட்டிக்கொள்கிறார்கள். சில நண்பர் அஜித் போல என விஜய் பேசி வருகிறார். அதே போல விஜய் கட்சி தொடங்கியதற்கு அஜித்தும் வாழ்த்து தெரிவித்தார். அந்த வகையில் மதுரையில் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் விஜய் இணைந்து இருக்கும் கட்டவுட்டை தூக்கி பிடித்திருந்தார்.  அதில் தவெக கட்சித் துண்டு அணிந்த படி அஜித் இருந்தார். இது நிகழ்வில் ஹைலைட்டாக அமைந்தது.

விஜய்யுடன் அஜித் இருக்கும் போட்டோ வைரல்

Racer Ajithkumar & Actor Vijay🫂❤️ pic.twitter.com/7kR2lkDyQG

— Saloon Kada Shanmugam (@saloon_kada)

விழா மேடையில் 300 மீட்டர் ரேம்ப் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரேம்ப்பில் நடிகர் விஜய் நடந்து வந்து தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கினார். இந்த நிலையில் சில ரசிகர்கள் ரேம்ப்பில் ஏறி வந்து அவரை கட்டிப்பிடிக்க முயல, அவர்களை பவுண்சர்கள் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து விஜய் அவர்களை அமைதிப்படுத்தினார். இதனால் சில நிமிடங்கள் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மேடைக்கு திரும்பிய விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை வரவேற்க உங்கள் விஜய் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்?

அதனைத் தொடர்ந்து பேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாவிற்கு பிறகு வந்தவர்கள் கொள்கையில் இருந்து விலகியதால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார் எனவும், அண்ணாவின் கொள்கை, அதனை  பின்பற்றிய எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.