தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. கொடைக்கானல் ஓட்டல் ஓனர் கைது..!
Webdunia Tamil August 22, 2025 04:48 AM

பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தமிழ்நாட்டில் 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், கொடைக்கானலில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தை தொடர்ந்து எதிர்த்த காரணத்தால் அவர் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கொடைக்கானலை சேர்ந்த இதயத்துல்லா என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கொலைக்கு காரணமானவர்களுக்கு இவர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜனவரி 25-ம் தேதி அப்துல் மஜீத், ஷாகுல் ஹமீத் ஆகியோரை என்.ஐ.ஏ. கைது செய்த நிலையில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இதயத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.