ஈரோடு மத்திய பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நடமாடும் இடமாக உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த நிலையத்தில் மதுபோதையில் விழுந்து கிடக்கும் மக்கள் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மினி பஸ் நிறுத்துமிடங்களில் பயணிகள் இருக்கைகளில் தூங்கும் மதுபிரியர்கள், பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களை பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். போலீசார் வந்து விரட்டியடித்தாலும் அவர்கள் மீண்டும் அதே இடத்தில் வந்து தஞ்சமடைவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் நேற்று இரவு கோவை பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடையில், ஒரு இளம்பெண் மதுபோதையில் விழுந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சுயநினைவின்றி கிடந்த அந்த பெண்ணை எழுப்பும் முயற்சியில் பலர் ஈடுபட்டபோதும், அவர் எழ முடியாமல் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டார். பொதுமக்கள், “பெண்கள் இப்போது மதுபோதையில் வீதிகளில் விழுந்து கிடப்பது போல இந்த காட்சி மிகவும் வருத்தமளிக்கிறது,” எனக் கூறினர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கூறுகையில், “வெளியூருக்கு செல்பவர்களில் சிலர் மது அருந்திய பிறகு நிலையத்திற்கு வருகிறார்கள். அதிகமான போதையால் எந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்பதே தெரியாமல் நடைமேடையில் விழுந்து கிடக்கிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். போலீசாரும் இவர்களை நேரடியாக சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்,” என்றனர்.