மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் நேற்று கடும் மழை பெய்துவந்த சூழலில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் தடுப்புகளைத் தாண்டி பாலத்தில் இருந்து கீழே தடுமாறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான வேனில், எல்.கே.ஜி முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 16 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் பயணித்துள்ளனர். இதில் 14க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிவபுரி மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். மேலும், மாணவர் கார்த்திக் ஜாதவ் பலத்த காயத்துடன் குவாலியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
“>
மேலும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இவ்வேனை ஓட்டியது பள்ளி உரிமையாளர் திவான் தகாத் என்பதும், அவரிடம் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லையெனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.