இன்று, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்வில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்டு கல்வி பயின்று வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர். பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும் தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?