நெல்லை மாவட்டம் மானூர் அருகே காரைக்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சகாரியா (66) தனது மனைவி மெர்சி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இருந்தார். ஆனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மெர்சி தனது மகன்கள் ஹென்றி, ஹார்லி பினோ (27) மற்றும் மகள் ஹெலனுடன் தனியாக வாழ்ந்துவந்தார்.
இதனால் சகாரியா தனியாகவே பழைய வீட்டில் வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி ஹென்றிக்கு திருமணம் நடந்த நிலையில், சகாரியாவுக்கு அதில் உடன்பாடு இல்லாததால், மனைவி அவரை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஹார்லி பினோ நேற்று தன் தந்தை வீட்டில் உள்ள உடைமைகளை எடுக்கச் சென்றார். பிரச்சினை மீண்டும் ஏற்படலாம் என நினைத்து அவரது தாய் மெர்சியும் கூட சென்றுள்ளார். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் சகாரியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தாயும் மகனும் தங்கள் பொருட்களை எடுக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த சகாரியா, இருவரையும் அறைக்குள் தள்ளி கதவை பூட்டிவிட்டார்.
அதன்பின், வீட்டில் இருந்த பெட்ரோலை ஜன்னல் வழியே உள்ளே ஊற்றி, இருவரும் கெஞ்சியும் கேட்காமல், சகாரியா பயங்கரமாக தீவைத்துள்ளார். ஒரு நிமிடம் முழுவதும் அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. இருவரும் அலறியபடி முயற்சி செய்தபோதும், இரக்கமின்றி சகாரியா தான் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது சத்தம் கேட்ட அயலவர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மூவரையும் மீட்டனர். ஆனால் மெர்சி மற்றும் ஹார்லி பினோ ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிர காயங்களுடன் இருந்த சகாரியா தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தைக் தொடந்து முன்னீர்பள்ளம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.