டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் இல்லம் உட்பட மொத்தம் 13 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற மருத்துவமனை கட்டுமான மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் பெரும் அளவிலான ஊழல், பணமோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக 2018–2019 காலகட்டத்தில், 11 புதிய மருத்துவமனைகள் மற்றும் 13 பழைய மருத்துவமனைகள் மேம்படுத்தும் திட்டங்களில் சுமார் ₹5,590 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டைச் சுட்டிக்காட்டி, அப்போது டெல்லி சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா, 2024ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் சுகாதார அமைச்சர்கள் சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விசாரணையை முன்னெடுத்து வரும் அமலாக்கத்துறை இன்று சோதனைகளைத் தொடங்கியுள்ளது.