தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் முதல்வர் தென்னிந்திய உணவுகள் குறித்து வியந்து பேசியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் தினமும் காலை சூடான சுவையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது தமிழக அரசு. இன்று 2,430 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலினுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களிலும் தென் மாநில உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக மசாலா தோசை, உப்புமா உள்ளிட்ட உணவுகள் அங்கே மிகவும் பிரபலமாக உள்ளது. அதுபோல பஞ்சாப் மாநில உணவுகள் தமிழ்நாட்டிலும் விற்கப்படுவது சிறப்பான விஷயம். தென்மாநில உணவுகள் தேசிய உணவு போல நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றன” என கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய அவர், கண்டிப்பாக நீங்கள் பஞ்சாப்க்கு ஒருமுறை வர வேண்டும். அது தியாகிகளின் மண். நீங்கள் அங்கு விருந்தினராக வந்து சுற்றி பார்க்க வேண்டும் என அன்பாக அழைப்பு விடுத்துள்ளார்.
Edit by Prasanth.K