மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு, 02 மூட்டை உரங்களை மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விவசாயிகள், பிந்த் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.நரேந்திர சிங் குஷ்வாஹாவிடம் முறையிட்டுள்ளனர்.
விசாயிகளின் குறையை கேட்டு, ஆத்திரமடைந்த நரேந்திர சிங் எம்.எல்.ஏ., விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவாவின் பங்களாவிற்கு சென்றுள்ளார். ஆனால் ஆட்சியர் சஞ்சீவ், அவரை சந்திக்க வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மீண்டும் கடும் கோபமடைந்த நரேந்திர சிங், தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவாவின் பங்காளவிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் வெளியே வந்த நிலையில், இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது பாஜ எம்.எல்.ஏ. நரேந்திர சிங், மாவட்ட ஆட்சியர் சஞ்சீவை அறைய கையை உயர்த்தியதோடு, ‘பிந்த் ஆட்சியர் ஒரு திருடன்’ என கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அத்துடன், இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை நீக்க வேண்டும் என்று பங்களா முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த இடத்தில் இருந்து செல்ல மாட்டேன் என்று எம்.எல்.ஏ. நரேந்திர சிங்வும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, நரேந்திர சிங் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.
இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நரேந்திர சிங் கூறுகையில், ஒவ்வொரு துறையும் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் அத்தியாவசிய பொருட்களை இழந்து வருகின்றனர். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக ஆட்சியரை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட ஆட்சியரை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.