உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவர், அதே பகுதியில் இருந்த வாலிபருடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனார். திருமணத்திற்குப் பிறகு, அவர் வேறு ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிக்கடி கைபேசி மூலம் அவருடன் பேசினார். இதைத் தவிர, பல முறை கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தொடர்பை அவரது கணவர் கண்டித்தபோதும், அவர் கேட்காமல், கள்ளக்காதலனுடன் அடிக்கடி ஓட்டம் பிடித்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள் குறைந்தது 10 முறை தலைமறைவானார். ஒவ்வொரு முறையும் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி கொண்டு வந்து வீட்டிற்கு அழைத்துவந்தனர். ஆனாலும், அந்த இளம்பெண் தனது கள்ளக்காதல் தொடர்பை விடாமல் தொடர்ந்து சந்தித்து வந்தார்.
இந்நிலையில், கணவன்–மனைவிக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தீர்க்க இரு குடும்பத்தினரும் கிராமப் பஞ்சாயத்தில் கலந்துரையாடினர். அப்போது, அந்த இளம்பெண் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு வினோதமான முடிவை அறிவித்தார்.
அவர், “எனது காதலனுடன் மாதத்தில் 15 நாட்கள் வாழ அனுமதி அளித்தால் மட்டுமே மீதமுள்ள 15 நாட்களை கணவருடன் கழிப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அங்கு இருந்த கணவர், உறவினர்கள், கிராமப் பெரியர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் அவரை பலமுறை அறிவுறுத்தியும், கள்ளக்காதலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அந்த இளம்பெண் தன் முடிவில் உறுதியாக இருந்து, கணவரின் வேண்டுகோளையும் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த கணவர், தன் மனைவியை கள்ளக்காதலனுக்கே தாரைவார்த்துவிட்டு, சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றார்.உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.