கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க சட்டப்படி, முன்னாள் துணை அதிபர்களுக்கு பதவி விலகிய பிறகு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை (Secret Service) பாதுகாப்பு வழங்கப்படும். அதேசமயம், முன்னாள் அதிபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஜோ பைடன் ஆட்சி காலத்தில், முன்னாள் துணை அதிபர்களுக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது டிரம்ப் நிர்வாகம், கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “2025 ஜனவரியில் கமலா ஹாரிஸ் பதவியை விலகினார். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது. அதனால், பாதுகாப்பு நீட்டிப்பு உத்தரவை வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு டிரம்ப் மீது இரண்டு முறை கொலை சதித் திட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அவற்றை ரகசிய சேவை பிரிவினர் முறியடித்தனர். இதன் மூலம், அமெரிக்க அதிபர்களை பாதுகாப்பதில் ரகசிய சேவையின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.