நெல்லை மேலப்பாளையம் – ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள இடுகாடு பகுதியில் நேற்று மதியம் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
அங்கு இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்யச் சென்றவர்கள், வெட்டவெளி பகுதியில் தென்னை மட்டைகள் குவியலின் நடுவே மனித உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பொதுவாக ஒருவர் மரணமடைந்தால், சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பின் உடலை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ செய்வார்கள். ஆனால் இந்த உடல் அவசர அவசரமாக தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்த எலும்புக்கூடு மற்றும் அப்பகுதியில் இருந்த சில தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மர்மநபர்கள் யாரையாவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தனரா? அது ஆண் உடலா அல்லது பெண் உடலா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.