கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இனி பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தி, அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களையும் பார்வையிடும் வகையில் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுவரை குணா குகை, தூண் பாறை, ஃபைன் ஃபாரஸ்ட், மோயர் சதுக்கம் போன்ற இடங்களுக்கு தனித்தனியாக சீட்டு வாங்க வேண்டியிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று நேரம் விரயமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக விடுமுறை மற்றும் சீசன் நாட்களில் கூட்டம் அதிகமாகும் போது சிரமம் அதிகமாக இருந்தது.
இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒரே கட்டண முறையில் அனுமதி சீட்டு வழங்கப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, வனத்துறை சுற்றுலா இடங்களின் தொடக்கப்பகுதியான தூண் பாறையில் சீட்டு வாங்கி, அதனைப் பயன்படுத்தி குணா குகை, ஃபைன் ஃபாரஸ்ட், மோயர் சதுக்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடலாம்.
இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். கட்டண விவரங்களில், தமிழகம் மற்றும் வெளிமாநில பயணிகளுக்கு பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளின் சிரமம் குறைந்து, நேரம் மிச்சமாகும் என்பதால் இது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.