ஜப்பானில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான காதல் கதை தற்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 23 வயதான கோஃபு என்ற இளைஞரும், 83 வயதான ஆயிகோ என்ற பாட்டியும் கடந்த 6 மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் காதல் கதை குறித்து சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். கோஃபு, தனது தோழியின் வீட்டுக்குச் சென்றபோது முதன்முறையாக ஆயிகோவை சந்திக்கிறார். அந்தத் தோழியின் பாட்டி தான் ஆயிகோ. முதல் பார்வையில் காதலாகிவிட்ட இவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலான வயது வித்தியாசம் காரணமாக தொடக்கத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தனர்.
ஆனால், டிஸ்னிலாந்து பயணத்தில், ஒருநாள் ஆயிகோவின் பேத்தி திட்டத்தை ரத்து செய்ததால், கோஃபுவும் ஆயிகோவும் மட்டும் சென்று, சிண்ட்ரெல்லா கோபுரம் முன் கோஃபு காதலை வெளிப்படுத்தி, ப்ரொபோஸ் செய்தார். இந்த காதல் ஜோடி தற்போது இணையத்தில் சூப்பர் ஸ்டார்களாக மாறியுள்ளனர்.
கோஃபு “ஆயிகோவின் முகத்தைப் பார்க்கும் போது என்னுடைய நாள் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறது” என உருக்கமாக கூறியுள்ளார். ஆயிகோவும், “கோஃபுவுக்காக சமையல் செய்யும் போது எனக்கு இளமையோடு வாழும் உணர்வு வருகிறது” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும், இருவரின் குடும்பங்களும் இவர்களின் காதலை முழுமையாக ஆதரிக்கின்றன என்பது இதன் முக்கிய அம்சம்.