3 நாட்கள் தொடர் சோதனை.. 590 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய கும்பல்!
TV9 Tamil News September 02, 2025 07:48 PM

சென்னை, செப்டம்பர் 02: திருவள்ளூர் மாவட்டம் அருகே வாகன சோதனையில் சுமார் 590 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக போதை பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக அரசும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போலீசாரும் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இது ஆளும் அரசுக்கு அவப்பெயராக அமைந்து விடும் என சொல்லப்படுவதால் கண்காணிப்பு இருமடங்காக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் 590 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நடந்தது என்ன?

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து ஆயிரம் கிலோ கஞ்சா சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக் உளவுத்துறை டிஜிபிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உஷாரான போலீசார் மூன்று நாட்களாக எளாவூர் சோதனை சாவடி, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர் ஆகிய இடங்களில் மத்திய போதை பொருள் தடுப்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் சாமி தலைமைதான தடைப்படை போலீசார் மாறு வேடத்தில் முகாமிட்டு வாகன சோதனை மேற்கொண்டனர்.

Also Read: மிரண்ட சென்னை விமான நிலையம்.. ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வந்த பெண்!

அப்போது தடா பகுதியில் உள்ள தாபா உணவகம் ஒன்றில் சந்தேகம்படும் படியான நிகழ்வு நடைபெற்றது. அதாவது ஒரு மினி லாரி மற்றும் சொகுசு காரில் ஒரு கும்பல் வந்தது. அந்த இரு வாகனங்களையும் எளாவூர் சோதனை சாவடியில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொருட்கள் இருந்தது. ஆனாலும் அந்த கும்பல் மீது சந்தேகம் இருந்ததால் அந்த பொருட்களை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் ரூ.3 கோடி மதிப்புக்கொண்ட 590 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி, ராமநாதன், ஷேக் அப்துல்லா, மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த வினோத்,  கோவையைச் சேர்ந்த பாரதி, மணிகண்டன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

Also Read: போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..

இவர்கள் ஆறு பேரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மாநிலங்கள் மற்றும் சர்வதேச அளவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரியவந்தது.  மேலும் இந்த கும்பலுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரகசிய தகவல் அளிக்கலாம்

மேலும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உறுதி செய்ய போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  போதை பொருள் கடத்தும் தொடர்பான தகவல் தெரிந்தால் உடனடியாக 1933 என்ற எண்ணிற்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களில் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.