ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன், அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி லிட் பீரோ உறுப்பினர் காய் குய், நேபாள பிரதமர் ஒலிசர்மா, வியட்நாம் பிரதமர் பாம்மின்சின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி இதன்போது சந்தித்தார்.
இந்நிலையில் சீனாவுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று தலைநகர் டில்லி திரும்பியுள்ளார். இந்த அரசு முறை பயணம் குறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது;
'இந்த பயணம் பயனுள்ளதாக இருந்தது. சீனாவில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பலரை சந்தித்து உரையாடினேன். அவர்களிடம் உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்.
உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.