ஒரு காதல் கதைக்காக கிராமத்தின் மின்சாரத்தையே துண்டித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் இளைஞன் பலமுறை தனது காதலிக்கு செல்போனில் அழைத்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த இளைஞன், தனது காதலி வேறொருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக சந்தேகித்து, அவசரத்தில் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளான்.
கோபத்தின் உச்சத்தில், அந்த இளைஞன் தனது காதலியின் கிராமத்திற்கு மின்சாரம் செல்லும் பிரதான மின் கம்பத்தை அடைந்து, மின்சார ஒயர்களை வெட்டி துண்டித்துள்ளார். இதன் விளைவாக, கிராமம் முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இந்த திடீர் மின்வெட்டு, கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
கிராம மக்கள், மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மின்வெட்டுக்கான காரணத்தை கேட்டபோது, அதிகாரிகள் ஆய்வு செய்து மின்சாரம் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து, நடந்த விசாரணையில், மின்சார துண்டிப்புக்குக் காரணம் ஒரு காதல் விவகாரம் என்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அந்த இளைஞனை கண்டுபிடித்து, எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோன்ற செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran