கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மஹாராஷ்டிராவின் நாக்பூர் ஈரடுக்கு மேம்பாலம்..!
Seithipunal Tamil September 04, 2025 11:48 AM

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ரூ.573 கோடி செலவில் சுமார் 5.6 கி மீட்டர் தூரத்திற்கு எல்ஐசி ஸ்கொயர் முதல் ஆட்டோமேட்டிக் ஸ்கொயர் வரை இரண்டடுக்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஒற்றை தூண்களில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி மேம்பாலத்தில், 05 மெட்ரோ நிலையங்கள் உள்ளன.

குறித்த இரண்டடுக்கு மேம்பாலம் ஆசியாவின் மிக நீளமானது என்ற பெருமையை பெற்றுள்ளதோடு, இந்தியாவின் உள்கட்டமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.இந்நிலையில், மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

நாக்பூரில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கின்னஸ் உலக சாதனைகளின் இந்திய பிரதிநிதி ஸ்வாப்னில் டோங்கரிகர், உலக சாதனைக்கான சான்றிதழை மஹாராஷ்டிரா மெட்ரோ நிர்வாக இயக்குநர் ஸ்ரவன் ஹர்திகரிடம் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மஹாராஷ்டிர மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை அளிக்கக் கூடிய ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாராட்டி பேசியுள்ளார்.

நிதின் கட்கரி நாக்பூர் பாராளுமன்ற தொகுதி எம்பியாகவும், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.