அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை வரும் டிசம்பரில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது, அதனால் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பு, தில்லியில் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வெளியானது. ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தேஜகூவிலிருந்து விலகியிருந்ததால், தினகரனின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், அமமுக அடுத்தடுத்த தேர்தல்களில் நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது நடைபெறுமானால், தமிழக அரசியலில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.