காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர் காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அபிதா (59) மற்றும் தாய் வள்ளியம்மாள் (88) உடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டில் தங்காமல் சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் அபிதா மற்றும் மாமியார் மட்டும் இருந்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, இருவரையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகைகளை பறித்து தப்பினார். புகார் அளிக்கப்பட்டதும் குன்றத்தூர் போலீசார் விசாரணை தொடங்கினர். இதில் அபிதாவே தனது கள்ளக்காதலனை அழைத்து வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
குழந்தைகள் இல்லாததால் அபிதா அடிக்கடி கோவிலுக்கு சென்று வந்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த 35 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்கள் கள்ளக்காதலர்களாக மாறினர். அவ்வப்போது பணம் கேட்கும் காதலனிடம், தன்னிடம் பணம் இல்லை ஆனால் மாமியார் வைத்திருக்கும் நகையை கொள்ளையடித்து பங்கு போடலாம் என்று அபிதா கூறியதாக தெரியவந்தது.
அதன்படி கணவர் இல்லாத நாளில், காதலனை அபிதா வீட்டுக்கு அழைத்தார். திட்டமிட்டபடி காதலன் முதலில் வள்ளியம்மாளை தாக்கி நகைகளை பறித்தார். போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க அபிதாவையும் கட்டிப்போடச் சொல்லி திட்டமிட்டனர். ஆனால், அபிதாவின் உடலில் எவ்வித காயமும் இல்லாதது, வள்ளியம்மாள் அணிந்திருந்த நகைகள் மட்டுமே பறிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கிடுக்கிப்பிடி விசாரணையில் அபிதா உண்மையை ஒப்புக்கொண்டார். சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் நகை பறிப்பு நடந்ததை அவர் மறைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் அபிதா தனது காதலனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தன. அபிதா சிக்கியதும், அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.