சென்னை: ஜெர்மனி பயணத்தை முடித்து லண்டன் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய முதலமைச்சரை, பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் மலர் மாலைகளுடன் வரவேற்றனர். பாரம்பரிய முறையில் 'அரட்டி, மலர் தூவி' முதலமைச்சரை எதிர்கொண்ட காட்சி, அங்கிருந்த அனைவருக்கும் பண்டிகை சூழலை நினைவூட்டியது. “ஸ்டாலின் வாழ்க!”, “தமிழகம் வளர்க!” என்ற முழக்கங்களால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பாகியது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், “இங்கிலாந்தில் கால் பதித்தபோது பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, லண்டன் வாழ் தமிழர்கள் அளித்த அன்பும் உற்சாகமும் பிரதிபலிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள், ரீட்வீட்டுகள் கிடைத்தன. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பலரும் “தமிழர்களின் ஒற்றுமையை காட்டும் காட்சி இது” என கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டு சந்திப்புகளில் பங்கேற்றதைத் தொடர்ந்து, லண்டனிலும் முதலமைச்சர் சில முக்கிய தொழில் சந்திப்புகளிலும், தமிழர் சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.