‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் பகுதியாக, அவர் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
முதல் நாளில் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழனிசாமி உரையாற்றினார். இரண்டாம் நாளில் காலை 10 மணிக்கு தேனி நகரிலுள்ள தனியார் விடுதியில் விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக செய்தி பரவியது. இதனால், தேனியில் திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பொதுவாக, பழனிசாமி தனது சுற்றுப்பயணங்களில் அந்தந்த மாவட்ட விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், தேனியில் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை பத்து நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.