தமிழக பாஜகவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை என பாஜக நிர்வாகியான அலிஷா அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் சமீபத்தில் பொறுப்புகள் மாற்றப்பட்டு 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் குஷ்பூ, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் பாஜக பிரமுகரும், விளையாட்டு வீராங்கனையுமான அலிஷா அப்துல்லாவின் பெயர் இடம்பெறவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவுக்காக கள செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த அலிஷா இதனால் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் “சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்ற பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் நோக்கத்திற்காகவே நான் பாஜகவில் இணைந்தேன். ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரு இந்திய வீராங்கனையாக இன்று வெளியான அறிவிப்புகள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
என் மூன்று வருட உழைப்பு குப்பையில் வீசப்பட்டுளது. கட்சியின் மூத்த நிர்வாகி கேசவ விநாயகத்திடம் என் உழைப்பை முன்வைத்தபோது அவர் என்னை உதாசீனம் செய்தார். 25 அணிகளுக்கான அமைப்பாளர்களில் ஒரு கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் கூட இல்லை” என ஆதங்கத்துடன் பேசியுள்ளார் அலிஷா.
Edit by Prasanth.K