காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 மற்றும் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 3,600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாகி, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகி, அங்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்த சேதத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ தெரிவித்ததாவது, பூமியின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகும்.
அதிர்வுகள் பாகிஸ்தான், இந்தியாவின் டெல்லி, ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன. அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த சமீபத்திய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட புதிய உயிர்சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.