ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆண்டுதோறும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காலத்தில் மக்கள் இடம்பெயர்வு அதிகமாக நிகழும். அதன்படி, குமரி மாவட்டம் பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் பகுதிகளில் ஒன்றாகும். எனவே இந்த ஆண்டும் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக குமரி மாவட்டத்திற்குச் செல்லும் ரயில்களில் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. பொதுவாக தெற்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகியவை ஆண்டுதோறும் ‘பூஜை சிறப்பு ரயில்கள்’ என்ற பெயரில் கூடுதல் சேவைகளை அறிவித்து வருகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டில் ரயில்வேதுறை மூலம் 150க்கும் மேற்பட்ட பூஜை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அறிவிப்புகளின் படி, 2025-ஆம் ஆண்டிற்கான ஆயுதபூஜை கால சிறப்பு ரயில்கள் தொடர்பான முழுமையான பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக சென்னை எக்ஸ்பிரஸ் சேவைகள், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மதுரையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி தினசரி சேவைகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
ஹைதராபாத்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் தென் மத்திய ரயில்வே இயக்கும் இந்த சேவை இந்த ஆண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கூடுதல் சேவைகள் இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் அக்டாபர் 01ந் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை மற்றும் 02-ஆம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை ஆகும். இந்நிலையில், 03-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் அடுத்த சனி, ஞாயிறு என்று ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்கமுடியும். அத்துடன், சொந்த ஊருக்கு சென்று கொண்டாட்டங்களில் ஈடுப்பட பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே முன்பதிவு வசதியுடன் கூடுதல் ரயில்கள், நள்ளிரவு நேரங்களிலும் இயக்கப்படும் ரயில்கள், கூடுதல் பெட்டிகள், சலுகை கட்டணத்துடன் வசதியான சேவைகள் போன்ற எதிர்பார்ப்புகள் குமரி மக்களிடம் உள்ளது.