கடலூரில் 80 பேர் மயக்கம்: உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
Seithipunal Tamil September 06, 2025 11:48 AM

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு  வரும்  கிரிம்சன் ஆர்கானிக் என்ற இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தின் காரணமாக இரசாயன  வாயு  வெளியானதில் அப்பகுதியைச் சேர்ந்த  80-க்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  பொதுமக்கள் ஒன்று திரண்டு, ஆலைக்குள் புகுந்து அங்குள்ள பொருள்களை அடித்து உடைத்துள்ளனஎர் என்பதிலிருந்தே மக்களின் கோபத்தையும்,  இந்தப் பிரச்சினையின்  தீவிரத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

கிரிம்சன் ஆர்கானிக் என்ற இரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த  2021 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஏற்பட்ட  தீ விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் பல தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அப்போதே இந்த ஆலையை அரசு மூடியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடலூர் மாவட்ட அமைச்சர் தான் அவரது செல்வாக்கை பயன்படுத்தி இந்த ஆலையைக் காப்பாற்றினார். அதன் விளைவு தான் இன்று ஏற்பட்ட விபத்து ஆகும்.

மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக  கிரிம்சன் ஆர்கானிக் இரசாயன தொழிற்சாலையில் பாதுகாப்பு ஆய்வு நடத்தி, அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இரசாயன வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.