அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் எடுத்த தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். நிச்சயமாக மறுபரீசிலனை செய்வார்கள். அதனால் இப்போது குழப்பம் செய்ய வேண்டாம்.
மூப்பனார் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு டி.டி.வி. தினகரனை ஜி.கே.வாசன் அழைத்திருந்தார். கூட்டணிக்குள் சின்ன சின்ன விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த இடமும் வேண்டாம் என்று தான் டி.டி.வி. தினகரன் எங்களிடம் வந்தார். அவர் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதி. அவர்கள் இருவர் மீதும் நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். நல்ல கூட்டணி, நிச்சயமாக அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது தொடர்பாக தலைவர்கள் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார்கள். பிரச்சினை என்பது எங்கும் இல்லை.
யூகங்களுக்கு தற்போது பதில் அளிக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இருவரும் விரும்பினார்கள். பிரதமர் மோடி மீது கொண்ட அன்பின் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் தேர்தலில் நின்றார். எனவே தீர்வு கிடைக்கும். தேர்தலுக்கு காலம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக எல்லோரும் இணைந்திருக்கிறோம். கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் களையப்படும். எனக்கு நிகழ்வுகள் இருந்ததால் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் தெரிவித்து விட்டேன். பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் நான் பங்கேற்று வருகிறேன்.
தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது வேறு, ஆட்சி அமைப்பது என்பது வேறு. விஜய்க்கு மாஸ் இருக்கிறது. அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.