அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஒரு பிரிவும், சேர்க்கக் கூடாது என்கிற மற்றொரு பிரிவுமாக அதிமுக பிளவுபடும் சூழல் தோன்றியுள்ளது. இணைப்பு முயற்சி பிளவை உருவாக்கும் முயற்சியாக மாறுவது விசித்திரமாக மாறியுள்ளது.
அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று போராடுகிற அளவுக்கு சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். போன்றோர் தகுதியானவர்களா என்பது நியாயமான கேள்வி. அதே சமயம் அவர்களை இணைத்துக் கொண்டால்தான் அதிமுக பலம் பெறும் என்பதையும் மறுக்க முடியாது. சசிகலா & co. இணைய விரும்புவது தங்கள் அரசியலைக் காப்பாற்றிக் கொள்ள. அவர்களை சேர்க்க எடப்பாடி மறுப்பது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தவிர இதில் யாருக்கும் கட்சி நலன் இல்லை. அவர்கள் இணைந்தாலும் அதிமுக பழைய பலத்தை பெற்று விடப் போவதில்லை. ஆனால், திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று சுமார் 75% மக்கள் விரும்புகின்றனர். அதனால், எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க, வலிமை மிக்க எதிர் அணியின் தேவை இப்போது அதிகரித்துள்ளது என்பதால் இணைப்பும் தேவையாகிறது.
அண்ணாமலை தலைவராக இருந்த வரை, திமுகவா பாஜகவா என்றிருந்த நிலை அதன் பின் திமுகவா அதிமுகவா என்று மாற்றப்பட்டதாலும், பாஜக இப்போது அதிமுகவுடன் சேர்ந்திருப்பதாலும், இருக்கிற மோசங்களில் நல்ல மோசம் என்ற அடிப்படையில், அந்த அணியையே திமுகவுக்கு மாற்றாக ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏற்கெனவே, பலவீனமான நிலையில் உள்ள அதிமுக, செங்கோட்டையன் நீக்கத்தையடுத்து, மேலும் பலவீனம் அடைந்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடியை சார்ந்திருப்பது எந்த அளவுக்கு பயன் தரும் என்பது பாஜக சிந்திக்க வேண்டிய விஷயம். அதிமுக உடையும் நிலையில், பாஜக தலைமையில் தனி அணி செயல்பட்டிருந்தால் அதுவே விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை இழந்து விட்டோம்.
இன்றைய நிலையில், எடப்பாடியை எதிர்த்து விலகி வருபவர்களோடு இணைந்து பாஜக செயல்பட்டால், அந்த அணியோடு இணைந்து அண்ணாமலை தீவிரமாக செயல்படவும், திமுக - எடப்பாடி எதிர்ப்பு வாக்குகளை ஈர்ப்பதும் எளிதாக இருக்கும். இது தாமதப்படுத்தப்படும் பட்சத்தில், அவர்கள் விஜய் பக்கம் சாய்ந்தால், பாஜக எடப்பாடி அணி பெரும் சிக்கலை சந்திக்க நேரலாம். கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி இன்னும் ஏற்கவில்லை. செங்கோட்டையன் பிரிவுக்கு அதில் ஆட்சேபம் இருக்காது. அந்த வகையிலும் இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கக் கூடும். புதிதாக தோன்றியுள்ள அரசியல் சூழலை பாஜக சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.