ஒரே இடத்தில் காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்.. இந்த கோயில் தெரியுமா?
TV9 Tamil News September 08, 2025 05:48 PM

கடையேழு வள்ளல்களில் ஒருவர் வல்வில் ஓரி. இவர் கொல்லிமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டுள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் உருவான கோயில்களில் ஒன்றுதான்  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் கைலாசநாதர் பரம்பலர்ந்த நாயகி அம்மனுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் தலவிருட்சமாக வில்வம் மரம் இருக்கும் நிலையில் புராணத்தில் இந்த ஊர் ராஜபுரம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இப்படியான கைலாசநாதர் கோயில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயிலில் இறைவனான கைலாசநாதர் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். இந்த திருக்கோயில் பற்றிய சிறப்புகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

கோயிலின் சிறப்புகள்

வில் வித்தையில் வீரனான வல்வில் ஓரி சிறந்த சிவ பக்தனாகவும் திகழ்ந்தான்.  ஒரு சமயம் இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு வேட்டைக்கு வந்த போது நீண்ட நேரமாக தேடியும் காட்டில் எந்த ஒரு உயிரினமும் கண்ணில் சிக்கவில்லை. கலைத்துப் போன அவன் ஓரிடத்தில் வென் பன்றியை கண்டான். உடனே சற்றும் தாமதிக்காமல் பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட நிலையில் பன்றி அங்கிருந்து தப்பியோடியது.

Also Read: திருமால் வழிபட்ட தலம்.. இந்த சிவன் கோயில் தெரியுமா?

அதனை வல்வில் ஓரி பின்தொடர்ந்தான். நீண்ட நேரம் ஓடிய பன்றி ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொண்டது .மன்னன் அப்புதரை விலக்கிய போது அவ்விடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதை கண்டு திடுக்கிட்டான். மேலும் லிங்கத்தின் நெற்றியில் தான் எய்த அம்பு தாக்கி ரத்தம் வழிந்தது. கலங்கிய மன்னன் தன் தவறை உணர்ந்து சிவனை வணங்கினான்.  சிவன் அவனுக்கு விஸ்வரூபம் காட்டி தான் பன்றியாக வந்ததை உணர்த்தினார். இதனை தொடர்ந்து இந்த இடத்தில் கைலாசநாதர் கோயிலை ஓரி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.அதனால் இன்றளவும் கைலாசநாதரின் திருமேனியில் அம்புட்டுவதற்காக தழும்பு உள்ளது.

6 கால பூஜை நடைபெறும்

மேலும் சிவராத்திரியின் போது சிவாலயங்களில் நான்கு கால பூஜை தான் நடக்கும். ஆனால் இந்த கோயிலில் ஆறு கால பூஜை நடப்பது சிறப்பான விஷயமாகும். அதேபோல் அம்பாளான அறம் பலத்த நாயகி தனி சன்னதியில் வீற்றிருக்கும் நிலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் காலையில் விசேஷ யாஹம் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வளர்பிறை பிரதோஷத்தில் உச்சி காலத்தில் அறம் வளர்த்த நாயகியிடம் வழிபாடு செய்தால் விரைவில் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கையாகும்.

காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்கள்

அப்போது உப்பில்லாத சாதம், அரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றையும் படைத்து வழிபடுகிறார்கள். இந்த தலத்தில் கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர் எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷமாக பார்க்கப்படுகிறது . கோயில் பிரகாரத்தின் ஆரம்பத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்பாளுடனும், பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர் பர்வதவர்த்தினி அம்பாளுடனும் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள்.

Also Read: Laksmi Kuberar Temple: வாழ்க்கை செழிக்கும்.. இந்த லட்சுமி குபேரர் கோயில் தெரியுமா?

அதனால் காசி, ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்த பாக்கியம் இந்த கோயிலில் நமக்கு அமைகிறது. மேலும் பிரகாரத்தில் அமைந்திருக்கும் வன்னி மரத்தின் அடியில் வல்வில் ஓரிக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுண்டல், பொங்கல் நைவேத்தியமாக படைத்து விசேஷ பூஜை நடைபெறுகிறது. கோயில் கட்டிய மன்னருக்காக சிறப்பு வழிபாடு நடைபெறுவது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பிரகார தெய்வங்கள்

அது மட்டுமல்லாமல் கால பைரவர், தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி, ஐயப்பன், சரஸ்வதி, நாயன்மார்கள் ஆகியோரும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அம்பாள் சன்னதி அருகில் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் முருகப்பெருமான் தனித்தனி சன்னதியில் காட்சி கொடுப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம்,பங்குனி உத்திரம் ஆகிய மிக விமரிசையாக கொண்டாடப்படும். வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை கூறுங்கள் பெறுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.