தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக – தலைவர் விஜய் கண்டனம்..
TV9 Tamil News September 10, 2025 03:48 AM

சென்னை, செப்டம்பர் 9, 2025: தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் பயப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 2025 செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். திருச்சியில் குறிப்பாக மரக்கடை, டிவிஎஸ் டோல்கேட் ரவுண்டானா, தலைமை அலுவலகம் ரவுண்டானா, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். குறிப்பாக, இதில் ஒரு இடத்தில் அவர் உரையாற்ற உள்ளார். ஏற்கனவே சத்திரம் பேருந்து நிலையத்தில் தலைவர் விஜய் உரையாற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டபோது, அது மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு இடத்தைத் தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த சூழலில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் செப்டம்பர் 8, 2025 அன்று திருச்சி விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். தலைவர் விஜய் இன்னும் சில நாட்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுமதி கோருவது தொடர்பான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்வதற்காக அவர் திருச்சிக்கு சென்றிருந்தார்.

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

தவெக கட்சி பொதுச் செயலாளர் மீது வழக்குப்பதிவு:

அப்போது, விமான நிலையத்திற்கு வந்த என். ஆனந்தை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், காவல்துறைக்கு அளிக்க வேண்டிய மனுவை அவர் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்தார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியதாகக் கூறி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: கோவையில் அதிர்ச்சி.. விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பிக்கு அரிவாள் வெட்டு.. நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து பயப்படும் திமுக:

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “ மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி யாருக்கு பயப்படுகிறதோ தெரியாது, ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து, முழுநேரமும் நம்மை குறிவைத்து, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கின்றனர்.

அதன் ஒரு பகுதிதான் திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என். ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.