பள்ளிக்குச் செல்வதற்காக வெளியேறிய ஒரு சிறுவன், திடீரென பசி தாங்காமல், சாலையோரத்தில் திறந்தவெளி வடிகாலருகே நின்று தனது டிபனை எடுத்துச் சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையின் அப்பாவித் தோற்றம் பலரது மனங்களையும் தொட்டுள்ளது.
இந்த வீடியோ எந்த மாநிலத்தில் எடுத்தது என்பதற்கான உறுதியான தகவல் இல்லையெனினும், சமூக ஊடகங்களில் இது உத்தரப்பிரதேசம், அலிகர் மாவட்டத்தில் உள்ள கைர் சாலை, கோண்டா டர்ன் பகுதியில் பதிவானதாக சொல்லப்படுகிறது.
வீடியோவில், பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த சிறுவன், சாலையோரத்தில் ஒரு குழிக்கருகே நின்று, தனது டிபன் பாக்ஸை திறந்து நூடுல்ஸ் போன்ற உணவை சாப்பிட ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்த ஒருவர், அதை வீடியோவாக படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சிறுவனின் இந்த செயல்கள், பல நெட்டிசன்களிடம் அப்பாவி உணர்வையும், சமூகம் குறித்து சிந்திக்க வைக்கும் நிலையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தெருவின் நடுவே திறந்த வடிகால் அருகே சிறுவன் நின்று உணவு உண்டதை கண்டும், குழந்தையின் பாதுகாப்பு குறித்த கவலையும் பலர் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, அருகிலுள்ள ஒரு பள்ளி மாணவன், சாலையோரத்தில் திறந்தவெளி குழியில் விழுந்து லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிசிடிவி மூலம் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.
திறந்தவெளி வடிகால்கள் மற்றும் பாதுகாப்பற்ற சாலை அமைப்புகள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ளன என்பதையே இந்த சம்பவங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன.