'ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை' அன்புமணி நீக்கம் குறித்து வழக்கறிஞர் பாலு பேச்சு
TV9 Tamil News September 12, 2025 08:48 AM

சென்னை, செப்டம்பர் 11 : பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கியது செல்லாது என்றும் பாமகவை ராமதாஸ் கட்டுப்படுத்த முடியாது என்றும் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கிய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரது தந்தை ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. நானே கட்சிக்கு தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். அதே நேரத்தில், இருவருக்கு தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அன்புமணியிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸில் உள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

இதற்கு மூன்று ராமதாஸ் கெடு விதித்தும், அன்புமணி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான், அன்புமணியை பாமகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது பாமகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  மேலும், வேறு கட்சி வேண்டுமானாலும் அன்புமணி தொடங்கட்டும் என்றும் ராமதாஸ் கூறினார்.  இந்த நிலையில்,  அன்புமணியின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாமகவை கட்டுப்படுத்த ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர் விளக்கம் அளித்தார்.

Also Read : கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..

‘ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை’

சென்னையில் பேசிய வழக்கறிஞர் பாலு, ”அன்புமணியை நீக்கம் குறித்த பாமக நிறுவனம் ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது. கட்சி விதி மற்றும் தேர்தல் ஆணைய விதியின்படி, இது செல்லாது எனவும், பாமகவில் நிர்வாகிகளை நீக்க, சேர்க்க தலைவர் அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம். கட்சியின் நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் இல்லை. அனைத்து முடிவுகளும் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது.

நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் கட்சிக்கு எதிரானது. பாமகவின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரின் பதவி 2026 வரை நீடிக்கிறது. அதன் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாப ஆகியோர் இருந்து வருகின்றனர்.

Also Read : அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!

அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது.” என்றார். முன்னதாக, தன்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து பேசிய அன்புமணி, “அனைத்து கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பாலு பதில் அளிப்பார். இதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.